இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் ஒட்டிச் சென்ற மெர்சிடிஸ் ஜிஎல்ஈ ரக சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற போது இன்று அதிகாலை 5:30 அளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

அதிவேகமாக வந்த சொகுசு கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்தது. கார் தீப்பற்றியவுடன் அதிலிருந்து எகிறி குதித்த ரிஷப் பண்ட் சாலையில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டதால் அவரது முதுகு மற்றும் காலில் பலத்த காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

ரிஷப் பண்ட் ஓட்டிவந்த கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்து நாசமானது அருகில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பண்டை யாரும் காப்பாற்ற முன் வரவில்லை.

அந்த வழியாக சென்ற ஹரியானா மாநில போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர் சுஷில் குமார் பேருந்தை நிறுத்திவிட்டு பண்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

சுஷில் குமாரிடம் தான் ரிஷப் பண்ட் என்று கூறியுள்ளார் சுஷிலுக்கு கிரிக்கெட் குறித்து அவ்வளவாக தெரியாது என்ற போதும் அவரை காப்பாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். அவருடன் பண்டை மீட்க்கும் முயற்சியில் உதவிய அந்த பேருந்து நடத்துனர் இவர் கிரிக்கெட் வீரர் என்பதை புரிந்துகொண்டுள்ளார்.

இருவருமாக நெடுஞ்சாலை பாதுகாப்பு மற்றும் போலீசாருக்கு தகவலை அளித்துவிட்டு பின் ஆம்புலன்சில் ஏற்றி ரூர்கீ அருகில் உள்ள சக்ஸம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரிஷப் பண்டை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த சுஷில் குமாரை கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சக்ஸம் மருத்துவமனையில் இருந்து டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் முதுகு மற்றும் கால் தசை காயம் ஆகியவற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

முற்றிலும் எரிந்து சாம்பலான நிலையில் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அந்த காரை ஓட்டிவந்த ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய கிரிக்கெட் வீரர்கள் பதிவிட்டுள்ளனர்.