“ஜனநாயகம் இவ்வளவு கீழ் நிலைக்கு போய்விட்டதே” என்று நடிகர் விஷால் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட நடிகர் விஷால்  வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு,  நடிகர் விஷாலின் வேட்புமனு உட்பட பல மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேண்டுமென்றே தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகக் கூறி விஷால் சாலை மறியல் செய்தார். பிறகு ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஆனால் விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்தவர்களில் சுமதி மற்றும் தீபன் இருவரின் கையெழுத்து போலியானது என்று எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவருடைய மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இந்த நிலையில் மிரட்டப்பட்டதால் சுமதியும், தீபனும் பின்வாங்கியதாக ஆடியோ ஆதாரத்தை விஷால் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானியிடம் அளித்தார்.

ஆனால் தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது என்று தேர்தல் அதிகாரி கூறி விட்டார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “என் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது வீடியோவில் உள்ளது. ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து மனுவை நிராகரித்துள்ளனர். நான் மிரட்டியதால் முதலில் எனது மனுவை ஏற்றுக்கொண்டதாக தேர்தல் அதிகாரி கூறுகிறார்.  ஒரு அரசு அதிகாரியை நான் மிரட்ட முடியுமா?

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிடுவேன்.

நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்தெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால் ஜனநாயகத்தின்  நிலை இப்படியாகிவிட்டதே என்பதுதான் என் வேதனை. ஜனநாயகம் மிக கீழான நிலைக்கு சென்று விட்டது” என்று  விஷால் தெரிவித்தார்.