விருகம்பாக்கம் வங்கி லாக்கரை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற கொள்ளையன் நேபாள நாட்டில் இன்டர்போல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் செயல்படும் ஐ.ஓ.பி. வங்கியில் கடந்த சனி, ஞாயிறு விடுமுறையைப் பயன்படுத்தி ரூ. 32 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

திங்கட்கிழமை காலை வங்கிக்கு வந்த ஊழியர்கள் வங்கி உள்ளே இருந்து கரும்புகை வெளியானதைக் கண்டு  அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தனர். வங்கியின் லாக்கர் கதவு கேஸ் கட்டர் மூலம் ஒன்றரை உயரம், ஒன்றரை அடி அகலத்திற்கு வெட்டி உள்ளே புகுந்து இரண்டு லாக்கர்கள் உடைக்கப்பட்டு  ரூ.32 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 5 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

காவல்துறை நடத்திய விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது, அதே வங்கியில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய சபில் லால் சந்த் மற்றும் அவரது மகன் திலூ ஆகியோர் என தெரியவந்தது. இருவரும் நேபாளம் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தல் காவல்துறையினர் நேபாளத்திற்குச் சென்றனர். இண்டர்போல் காவலர்களுக்கும்  தகவல் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே சென்னையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஹிலாராம், ஹர்பகதூர் ஆகிய இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தனர். கார் ஓட்டுநர் ரமேஷ் என்பவரையும் கைது செய்தனர். இந்த கொள்ளையில் கார் ஓட்டுநர் ரமேஷ் உட்பட ஆறு பேர் ஈடுபட்டது தெரிய வந்தது.

சென்னை காவல் ஆணையர் கேட்டுக்கொண்டதன் பேரில் இன்டர்போல் காவல்துறையினர் பழைய குற்றவாளிகள் பட்டியலை எடுத்து தேடியபோது,  சபீல் லால் சந்த் சிக்கினார்.  மற்ற நான்கு பேர் தேடப்பட்டு வருகிறார்கள். கைது செய்யப்பட்ட சபீல் லால் சந்த் விரைவில் சென்னை அழைத்து வரப்பட இருக்கிறார்.

இக் கொள்ளையில் வங்கி ஊழியர்கள் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கின்றனர்.