relief-aid-to-the-families-of-the-victims-of-the

சென்னை:
விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விசுவநத்தத்தைச் சேர்ந்த செல்வக் குமார், அம்மன் கோவில்பட்டி புதூரில் நடத்தி வந்த பொம்மி பட்டாசு ஆலையில் சரவெடி தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. நேற்று மாலை பணிகள் முடிந்த பிறகு மீதம் உள்ள கழிவுகளை ஆலையின் பின் பகுதியில் உள்ள குழியில் போட்டு எரிக்கும் பணியில் ஆறுமுகம், தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகிய 3 பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு ஆறுமுகம் சம்பவ இடத்திலே பலியாக, போர்மேன் தெய்வேந்திரன், தொழிலாளி குபேந்திரன் ஆகியோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிவகாசி அருசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குபேந்திரன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதன் காரணமாக பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் செல்வகுமரை இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம் நாட்டார்மங்கலம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் ஆறுமுகம் மற்றும் குபேந்திரன் ஆகியோர் உயிரிழந்த துயர செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இவ்விபத்தில் காயமுற்ற தெய்வேந்திரன், கணேசபாண்டி ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சமும், பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தெய்வேந்திரன் அவர்களுக்கு ஒரு லட்சமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.