ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி 41வது சதம் அடித்து, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் சார்பில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் அரங்கில் 49 சதங்கள் அடித்த ஜாம்பவான் சச்சின் சாதனையை அசுர வேகத்தில் விராட் கோலி நெருங்கி வருகிறார்.

virat

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிப்பெற்று 2-0 என முன்னிலை பெற்றது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் தொடங்கியது.

மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இந்த போட்டி நடைபெற்றதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டியை எதிர்ப்பார்த்தனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்தனர்.

அத்ந அணியின் கேப்டன் அரோன் பின்ச் 93 ரன்களும், உஸ்மான் கவாஜா 104 ரன்களும் எடுத்ததால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 313 ரன்கள் எடுத்து அசத்தியது. இதையடுத்து விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோஹித் சர்மா, தவான் மற்றும் ராயுடு சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளிக்க கேப்டன் விராட் கோலி தனித்து நின்று விளையாடினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 75 ரன்கள் எடுத்த போது இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முன்னாள் கேப்டன் டிராட்டை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தை பெற்றார்.

virat

இந்நிலையில் தனி ஒருவனாக போராடிய கேப்டன் கோலி தனது 41வது சதத்தை நிறைவு செய்தார். விராட் கோலி 123 ரன்களில் ஆட்டமிழக்க அவரை தவிர்த்து வந்த பிற வீரர்களும் ஏமாற்றம் அளித்தனர். இதனால் இந்திய அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 281 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் சதம் கடந்த விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் அரங்கில் அதிகபட்சமாக 49 சதங்கள் எடுத்த சச்சின் சாதனையை விராட் அசுர வேகத்தில் நெருங்கி வருகிறார். ஒரு நாள் அரங்கில் 10889 ரன்கள் எடுத்த ராகுல் டிராவிட் சாதனையை விராட் கோலி (10816 ரன்கள்) தகர்த்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இன்று விராட் கோலி அடித்த சதம் ஒரு நாள் அரங்கில் 41வது சதமும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 8வது சதமும், இந்திய மண்ணில் 19வது சதமும், ஆசிய மண்ணில் 28வது சதமும், 2019ம் ஆண்டின் 3வது சதமும், கேப்டனாக 19வது சதமும், ராஞ்சி மைதானத்தில் 2வது சதமும் ஆகும்.