சென்னை: வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால்,  1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வைரஸ் காய்ச்சல் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது, காய்ச்சல் குறித்து மக்கள் பயப்படத் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இந்த நிலையில்,  தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித் தேவை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலி: இந்தியாவில் எச்3என்2 வைரஸால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைத் தான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நோயாளிகள் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைப் புகாரளிக்கின்றனர், இது தோராயமாக 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும்.

இருமல், காய்ச்சல், குளிர், குமட்டல், வாந்தி, தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, மூக்கு ஒழுகுதல் மற்றும் தொடர்ந்து தும்மல் ஆகியவை H3N2 இன்ஃப்ளூயன்ஸாவின் பொதுவான அறிகுறிகளாகும் . கடுமையான சந்தர்ப்பங்களில், நோயாளி மார்பில் அசௌகரியம், விழுங்குவதில் சிரமம் மற்றும் தொடர்ச்சியான காய்ச்சலை அனுபவிக்கலாம். இதனை தடுக்க தமிழ்நாடு அரசு, காய்ச்சல் சிறப்பு முகாம்களை நடத்திவருகிறது.

இந்த நிலையில், பள்ளி தேர்வுகளை முன்கூட்டியே நடத்த தமிழகஅரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.