திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புரட்டாசி வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி செப்டம்பர் 18 முதல் 26ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில்,பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர் பக்தர்கள். தினசரியும் பக்தர்கள் வருகை தந்தாலும் பிரம்மோற்சவம், தெப்ப உற்சவ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.
அதுபோல, ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களிலும், புரட்டாசி சனிக்கிழமையின் போதும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், அன்றைய நாட்களில் இலவச தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாகவும் தேவஸ்தான நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில், புரட்டாசி வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் 2 பிரமோற்சவங்கள் நடைபெற உள்ளது. அதற்கான போஸ்டர் வெளியீடு விழா ஏழுமலையான் கோயில் முன்பு நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன்,
வருடாந்திர பிரமோற்சவம் செப்டம்பர் 18ம்தேதி முதல் 26ம்தேதி வரையிலும், நவராத்திரி பிரமோற்சவம் நவம்பர் 15ம்தேதி முதல் 23ம்தேதி வரையிலும் நடைபெற உள்ளது. பிரமோற்சவத்தின்போது விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. மேலும், வாகன சேவைகள் மூலம் பக்தர்களுக்கு சிறந்த தரிசனம் வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அறைகள் முன்பதிவு, அன்னப்பிரசாதம், லட்டுகள் மற்றும் சாதாரண பக்தர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும்.
மேலும், திருமலையில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமியையொட்டி மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்படி, இன்று நடைபெற இருந்த கருட சேவை விகானச மஹாமுனி ஜெயந்தியை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றவர், செப்டம்பர் 18ம்தேதி வருடாந்திர பிரமோற்சவத்தின் முதல் நாளான்று மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு முதல்வர் ஜெகன்மோகன் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கிறார் என்று கூறினார்.