சென்னை: சென்னை மாநகராட்சியின் ஆகஸ்டு மாத மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில்,  மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்து. அத்துடன் 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம், ரிப்பன் மாளிகையில்  மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் தலைமையில் ஆகஸ்டு 30ந்தேதி காலை 10 மணிக்கு கூடியது.  . இந்த கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் அண்மையில் கலைஞரின் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட 149வது திமுக மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் சண்முகம் பேரணியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, திடீரென நெஞ்சுவலி காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  அவரது நினைவை போற்றும் வகையில், மாமன்றத்தில்,  இரங்கல் தெரிவிக்கும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த இரங்கல் தீர்மானத்தின்,   ராமலிங்கம் (ஆளுங்கட்சி தலைவர் – திமுக) நொளம்பூர் ராஜன் (திமுக), சாந்தகுமாரி (திமுக), சாமுவேல் திரவியம் (காங்கிரஸ்), ஜீவன் (மதிமுக), ரேணுகா (சிபிஐ), ஜெயராமன் (சிபிஎம்), கோபிநாத் (விசிக), உமா ஆனந்த் (பாஜக), பாத்திமா முகமது ( இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), கிரிதரன் (அமமுக) உள்ளிட்ட அனைத்து கட்சியின் மாமன்ற உறுப்பினர்களும்  பேசினர்.

இதனையடுத்து மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் சண்முகத்தின் நினைவுகளை இக்கூட்டத்தின் வாயிலாக பகிர்ந்து கொண்டனர். முன்னதாக மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தும் மாமன்றத்தின் மரபு படி இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டு மீண்டும் கூட்டம் ஆகஸ்டு 31ந்தேதி  நடைபெறும் என கூறி ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று வழக்கம்போல மாமன்ற கூட்டம் தொடங்கியது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம்  மேயர் பிரியா ராஜன்  தலைமையில் இன்று ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  துணை மேயர்  மகேஷ்குமார்,  கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்  ராதாகிருஷ்ணன் உள்பட நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்றைய கூட்டத்தில் 58 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதில், முக்கியமாக, கதிட்ரல் சாலை மேம்பாலத்தின் பெயர் மாற்றம்,  அதாவது, கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு, மறைந்த கர்நாடக இசைக்கலைஞர் டாக்டர். எம்.பாலமுரளி கிருஷ்ணா பெயர் சூட்டுவது,  மாநகராட்சி சமுதாய நலக்கூடங்களில், ஓய்வுபெற்ற அலுவலர்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு, 50% சலுகை வழங்குவது,  கொரோனா தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட வாடகை வாகனங்களுக்கான நிலுவை தொகை – நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானம், கொடுங்கையூர், பெருங்குடி குப்பை மேடுகளில் பயோ உரங்கள் தயாரிப்பது  உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது.