சென்னை: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள  செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை யார் விசாரணை செய்வது என்பது குறித்த முடிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, தலைமை நீதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பி உள்ளார்.

செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமின் மனுவை, எந்த நீதிமன்றம் விசாரிக்கும் என்பது தொடர்பாக தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறும், தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என நீதிபதி எம்.சுந்தர் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  மேலும், செந்தில்பாலாஜி ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யவும் அனுமதி வழங்கியது.

இதையடுத்து,  சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்வழக்கில் ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை மீது விசாரிக்க தமக்கு அதிகார வரம்பு இல்லை என தெரிவித்து சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவை திருப்பி அனுப்பியது.

இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அமர்வுமன்ற நீதிபதியும், இந்த மனுவை விசாரிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்று மறுத்து விட்டார். மேலும்,  இந்த ஜாமீன் மனுவை தமக்கு அதிகாரம் இருக்கிறதா? என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வருமாறு அறிவுறுத்தியது.

இதையடுத்து,  செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யபட்டுள்ளது. அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் முறையிட்டார். இதையடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஆர் சக்திவேல் ஏற்கனவே விலகிய நிலையில் இந்த முறையீட்டு எப்படி ஏற்பது ? என  நீதிபதி எம்.சுந்தர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, மாற்று அமர்வும் இன்று இல்லை என்பதால்தான் தங்களிடம் முறையிடுவதாகவும் நிர்வாக ரீதியான உத்தரவை பிறப்பித்தால் கூட போதுமானது என தெரிவித்தார்.

எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என கூறிய நீதிபதி எம்.சுந்தர் இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என நீதிபதி எம்.சுந்தர் கூறினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணையில் இருந்து நீதிபதி ஆர் சக்திவேல் விலகியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்த வழக்கு  தொடர்பாக நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் தலைமையிலான அமர்வில் நாளை முறையிடப்படும் என செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

செந்தில்பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இருப்பது என்ன?

செந்தில்பாலாஜி மீது,  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 குற்ற வழக்குகளை பதிவு செய்த நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது 120 பக்க குற்றப்பத்திரிகை மற்றும் 3 ஆயிரம் பக்க வழக்கு ஆவணங்களை அமலாக்கத்துறை சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தது.

குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு ஆவணங்கள் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி, போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள் மூலம் பலரிடம் பெரும்தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக கிடைக்கப்பெற்ற பணத்தை செந்தில்பாலாஜி நேரடியாக பெற்றுள்ளார். அந்த பணத்தை தனது வங்கி கணக்கிலும், தனது மனைவி, சகோதரர் மற்றும் உறவினர்கள் சிலரது வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளார்.

இந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக உதவியாளர்களால் மின்னஞ்சல் மூலம் பகிரப்பட்ட தகவல்களும் கிடைத்துள்ளன. செந்தில் பாலாஜி திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான டிஜிட்டல் ஆதாரங்களும், ஆவணங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. சட்டவிரோத பண பரிமாற்றத்தில் மையப்புள்ளியாக செந்தில் பாலாஜி செயல்பட்டுள்ளார். சகோதரர், உதவியாளர்கள் மற்றும் சில போக்குவரத்து அதிகாரிகளுடன் சேர்ந்து பணம் ஈட்டுவதற்கான உத்தியை செந்தில் பாலாஜி உருவாக்கி உள்ளார்.

இந்த முறைகேட்டில் தனக்கு தொடர்பில்லை என செந்தில்பாலாஜி கூறினாலும், அவரது அதிகாரத்தின் கீழ்தான் இந்த முறைகேட்டுக்கான சதி அரங்கேற்றப்பட்டு உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. மொத்தம் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன, ஒவ்வொரு பணியிடத்துக்கும் எவ்வளவு பணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது, இந்த பணிக்காக யார், யாரிடம் இருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது போன்ற விவரங்களுடன் கூடிய பென்சிலால் எழுதப்பட்ட ஆவணங்களும், பென் டிரைவ்களும் கிடைத்துள்ளன.

செந்தில் பாலாஜி தனது சகோதரர் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியதற்கான டிஜிட்டல் ஆதாரங்களும் உள்ளன. இந்த முறைகேடு நடந்ததாக கூறப்படும் ஆண்டுகளிலும், அதற்கடுத்த ஆண்டுகளிலும் உள்ள வருமானத்தை ஒப்பிடும் போதும் மிகப்பெரிய அளவில் முரண்பாடு உள்ளது. இதேபோன்று வருமான வரி கணக்கை ஒப்பிட்டு பார்க்கும்போதும் முரண்பாடுகள் உள்ளன.

முறைகேடான இந்த பணம் யார் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது? என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. பொது ஊழியரான அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார். போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று அதனை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததற்கான அத்தனை ஆதாரங்களும் உள்ளன.

இதுபோன்று பல்வேறு தகவல்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.