பெரம்பலூர்: கல்குவாரி டெண்டர் எடுப்பதில், எதிர்க்கட்சியினரையும், ஆட்சியர் அலுவலகத்தையும் சூறையாடியது தொடர்பாக 12 திமுகவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர், நாராயண மங்கலம், நாட்டார் மங்கலம், பாடாலூர், கல்பாடி வடக்கு, செங்குணம் உள்ளிட்ட 31 கிராமங்களில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான மறைமுக ஏலம் நடைபெற இருந்தது.
இந்த மறைமுக ஏலத்தில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படை ஏலத்தின் கடைசி நாள், டெண்டரில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பத்தை, எதிர்க்கட்சியினர், பாஜகவினர் போட வந்தனர். அப்போது, அங்கிருந்த அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் மற்றும் திமுகவினர், எதிர்க்கட்சியினரை அடித்து விரட்டியதுடன், அங்கிருந்த அதிகாரிகளையும் மிரட்டினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட இருந்த நிலையில், டெண்டர் போடும் பெட்டியை திமுகவினர் அடித்து நொறுக்கினார். இந்த கூச்சலைக்கேட்டு, விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஆட்சியர் கற்பகம் வந்து, அனைவரையும் வெளியேற்ற காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன், டெண்டரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதனை அடுத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், திமுவை சேர்ந்த ரமேஷ், கோவிந்த், செல்வம், விஜயகாந்த், தர்மா உள்ளிட்ட 10 பேர் மீது 8 வழக்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில், வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்துவோம் என பாஜக எச்சரிக்கை விடுத்தது. மேலும், சமூக வலைதளங்களிலும் திமுக மீது கடும் விமர்சங்கள் எழுந்தது.
இந்த நிலையில், கல்குவாரி ஏலம் எடுக்கும் விவகாரத்தில் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மோதல் விவகாரத்தில் 12 திமுகவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.