காஷ்மீரில் மீண்டும்  கலவரம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடைபெற்றதால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பதற்றமாக உள்ளது.
pak
கடந்த ஜூலை 8 ந்தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்கான்வாணி  பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.  இதையடுத்து கடந்த  2 மாதத்துக்கும் மேலாக  காஷ்மீரில் கலவரம் நடைபெற்று வருகிறது.
இதுவரை நடைபெற்ற கலவரத்தில் 100க்கும் மேறப்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  7,000 பொது மக்களும், 4,000 பாதுகாப்பு படை வீரர்களும் காயம் அடைந்துள்ள தகவல்கள் தெரிவிக்கிறது.
இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 53 நாட்கள் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு நீடித்த நிலையில் இடையில் சில நாட்கள் தளர்த்தப்பட்டது. அதன் பிறகு மீண்டும் வன்முறை ஏற்பட்டதால் ஊரடங்கு நீடிக்கப்பட்டது.
இதற்கிடையில்  இன்று காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கினார்கள். இதனால் இரு தரப்பினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.