சென்னை: அக்டோபர் 2ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று, ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள 9 மாவட்டங்களைத்தவிர மற்ற மாவட்டங்களில்  கிராமசபை கூட்டம் நடத்தலாம் என  தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

வழக்கமாக கிராமசபை கூட்டங்கள்  குடியரசு தினவிழா, சுதந்திர தினவிழா,  உள்பட  4 முக்கிய தினங்களில்  நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு காந்தி ஜெயந்திஅன்று கிராமசபை கூட்டம் நடத்த திமுக அரசு உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழகஅரசு தடை செய்து வருகிறது.  ஆனால், கடந்த ஆண்டு அதிமுக அரசு,சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்துக்கு  தடை விதித்ததை எதிர்த்து திமுக போர்க்கோலம் பூண்டது. மக்கள் கிராம சபை பெயரில் கிராமசபை கூட்டத்தை தொடர்ந்து  நடத்தியது.

ஆனால்,   திமுக அரசு பதவி ஏற்றதும், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத்தன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டது.  இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது முதன்முறையாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராம சபை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கிராம சபை கூட்டம்  திறந்தவெளியில் நடத்தப்பட வேண்டும் என்றும்,  கொரோனா தடுப்பு விதி பின்பற்றப்படுவதையும் உறுதி செய்யவேண்டும் எனவும், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்கவேண்டும் எனவும் தமிழக அரசு கூறியிருக்கிறது.