சென்னை: மறைந்த  நடிகரும், தேமுதிக தலைவருமான  விஜயகாந்த்திற்கு மதுரையில் சிலை வைக்க வேண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்  கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டிச.26 ந்தேதி இரவு  சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், பின்னர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன்றி டிச.28 அதிகாலை  காலமானார்.

மறைந்த விஜயகாந்த் உடல் முதலில், அவரது வீட்டிலும், பின்னர் சென்னை தேமுதிக அலுவலகத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், இன்று (டிசம்பர் 29) காலை முதல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.  அவரது  உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள்,  திரைத்துறையினர், மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதியம் 1.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்படுகிறது.மேலும், அவரது இறுதி ஊர்வலம், தீவுத்திடலில் இருந்து மதியம் 1.00 மணியளவில் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, 4.45 மணியளவில் இறுதிச் சடங்கானது நடைபெற்று தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், மறைந்த விஜயகாந்த் உடலுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், “மறைந்த விஜயகாந்த் அருப்புக்கோட்டையில் பிறந்து அம்பாசமுத்திரத்தில் கல்வி கற்று மதுரையில் வாழ்ந்து வளர்த்து கலைத்துறை மற்றும் அரசியலிலும் தமிழகத்தில் சாதனை படைத்து பண்பாளராய், நெறியாளராய் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற விஜயகாந்த்திற்கு மதுரையில் முழு உருவச் சிலை வைக்க வேண்டும்” மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்திற்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்துள்ளார்.