ஜல்லிக்கட்டு கலவரத்தின் போது, கடந்த 23ஆம் தேதி நடந்த வன்முறையில் சென்னை மெரீனா அருகில் உள்ள நடுக்குப்பம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்குள்ள மீன் மார்க்கெட் கொளுத்தப்பட்டது. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க, தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின், த.மா.கா. தலைவர் வாசன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, மக்கள் நல கூட்டணி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களும் வந்து மக்களுக்கு ஆறுதல் சொல்லிச் சென்றனர்.

நடுக்குப்பம் பகுதி அடங்கியுள்ள திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜெ.அன்பழகனும் வந்து சென்றார்.

இந்த நிலையில் இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இந்த பகுதிக்கு வந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அதோடு, ஒரு குடும்பத்துக்கு தேவையான மளிகை பொருட்கள், அரிசி அளித்தார். இப்பகுதி மக்களில் பெரும்பாலானவர்கள் மீன் வியாபாரம் செய்பவர்கள் மீன்களை வைக்கும் ஐஸ் பெட்டியும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கினார்.

இது இப்பகுதி மக்களை மிகவும் நெகிழ வைத்துவிட்டது.

“திடீரென எங்கள் பகுதி மார்க்கெட்டுக்கு தீ வைத்து நாசமாக்கிவிட்டார்கள். பிழைக்க வழி தெரியாமல் தவித்து நின்றோம். குழந்தைகளுக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று துடித்துக்கொண்டிருந்தோம்.

அமைச்சர் வந்தார், வாக்குறுதி கொடுத்துச் சென்றார். திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வந்தார், ஆறுதல் சொல்லிச் சென்றார்.  இப்படித்தான் எல்லா அரசியல் பிரமுகர்களும் வந்து சென்றார்கள்.  தொகுதி எம்.எல்.ஏவான அன்பழகனும்  பேசிச் சென்றதோடு சரி.

ஆனால், இன்று  இங்கு, வந்த விஜயகாந்த்தான் எங்களது நிலையை உணர்ந்து அரிசி, பருப்பு கொடுத்ததோடு, மீன்களை வைக்கும் ஐஸ் பெட்டிகளையும் கொடுத்துச் சென்றார். அவர் நல்லா இருக்கணும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.