சென்னை: தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் அதிகாலை 3 மணியளவில் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில், நெகடிவ் என சோதனை முடிவு வந்துள்ளதாக மருத்தவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்துவருகிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் குடும்பத்தினர் கவனித்துக்கொள்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை. பிரசார வேனில் வந்தவர், தொண்டர்களிடம் கையசைத்து உற்சாகப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் விஜயகாந்த்துக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. மேலும் கொரோனா சோதனையும் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என சோதனை முடிவில் உறுதியாகி இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளது.  அவர் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.