விஜயகாந்துக்கு சொந்தமான தே.மு.தி.க.வில் இப்போது ஆணிவேர்களாக இருப்பது- அவரது மனைவி பிரேமலதா, மச்சான் எல்.கே.சுதீஷ் மற்றும் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் மட்டுமே.
அ.தி.மு.க.வுடன் உடன்பாடு கண்டதில் தே.மு.தி.க.வின் துணைப்பொதுச்செயலாளரான எல்.கே.சுதீஷுக்கு பிரதான பங்கு உண்டு.
கூட்டணி உருவான விதம், தி.மு.க.வுடனான முரண்பாடு , கேப்டன் உடல்நிலை ஆகிய விவரங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி எப்படி ஏற்பட்டது? மனம் திறக்கிறார் சுதீஷ்:
‘’கடந்த மக்களவை தேர்தலின் போது தே.மு.தி.க. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது.அப்போது நாங்கள் 14 இடங்களில் போட்டியிட்டோம்.பா.ம.க. 8 இடங்களில் நின்றது.
இந்த முறை அ.தி.மு.க.எங்களுக்கு . 10 தொகுதிகள் தரும் என்று எதிர்பார்த்தோம். நாங்கள் நேரடியாக 8 லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டோம். அது நடக்கவில்லை.
பின்னர் நாங்கள் குறித்து கொடுத்த 4 தொகுதிகளை அ.தி.மு.க. எங்களுக்கு ஒதுக்கியது. உடன்பாட்டின் ஒரு பகுதியாக பா.ஜ.க..எங்களுக்கு சில உறுதிமொழிகளை கொடுத்துள்ளது. மத்தியில் ஆட்சி அமைந்த பின் அந்த உறுதி மொழிகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க் கிறோம்.’’என்று கூட்டணி அமைந்த கதையை விவரித்தவர்- தி.மு.க.வுடனான பிரச்சினை குறித்து விளக்கினார்.
‘’ எங்களுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக துரைமுருகன் உள்ளிட்டோருடன் பேச்சு நடந்தது. ஒரு வாரம் பேசினோம் அவர்களிடம் 8 தொகுதிகள் கோரினோம்.காங்கிரசுக்கு ஏற்கனவே 9 இடங்கள் கொடுத்து விட்டதால் எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. உங்களுடன் கூட்டணியை விரும்பவில்லை என கூறிவிட்டோம். பா.ஜ.க.வுடன் உடன்பாடு கொள்ளவே கேப்டன் விரும்பி னார்.மற்றபடி துரைமுருகனுடன் பேச நான் யாரையும் அனுப்பவில்லை.’’என்று தி.மு.க.வுடனான சிக்கலை பகிர்ந்து கொண்டார்.
‘’விஜயகாந்த் தேர்தலில் பிரச்சாரம் செய்வாரா? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் இது:
‘’கேப்டன் உடல் நலம் நன்றாக இருக்கிறது. தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்வார். ஆனால் கேப்டனால் பேச இயலாது.அவர் சும்மா ஒரு சுற்று சுற்றி வந்தாலேயே போதும். இந்த தேர்தலில் கேப்டனே கட்சியை வழி நடத்துவார். முழு உடல் நலத்துடன் அவர் மீண்டும் வருவார்’’
—பாப்பாங்குளம் பாரதி