சென்னை

வெக  2 ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி நாளை விஜய் சில முக்கிய அறிவிப்புகளை  வெளியிட உள்ளார்.

நாளை (26-02-2025) காலை 7.45 மணிக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் நடக்கிறது. விக்கிரன்வாண்டியில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டுக்கு பிறகு விஜய் பங்கேற்கும் கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் ஆண்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தல், கூட்டணி, கட்சியை பலப்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பாகவும் தொண்டர்கள் மத்தியில் விஜய் பேச உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்துடன் தேர்தல் வியூக பணியில் கைகோர்த்துள்ள பிரசாந்த் கிஷோரும் பங்கேற்க இருக்கிறார். தமிழக வெற்றிக்கழத்தின் அரசியல் ஆலோசனை குழுவில் உள்ள ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.

தமிழக வெற்றிக்கழக 2-ம் ஆண்டு தொடக்க விழா பணிகளை மேற்கொள்ள 18 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு அக்கட்சி தலைமை வெளியிட்டது. இந்த குழுவில், சி.சூரியநாராயணன் (செங்கல்பட்டு), மோகன் ராஜா (செங்கல்பட்டு), எம்.எஸ்.பாலாஜி (செங்கல்பட்டு), வி.நரேந்திரன் (செங்கல்பட்டு), தீனா (திருப்போரூர்), தியாகு (திருப்போரூர்), ராஜேஷ் (திருப்போரூர்), ரமேஷ் (திருப்போரூர்), சுசி கணேஷ் (திருப்போரூர்), கே.தேவா (திருப்போரூர்), எஸ்.விஸ்வநாதன் (திருப்போரூர்), ஹேமா (திருப்போரூர்), விஜயதேவி (திருப்போரூர்), புஷ்ப ராஜ் (திருப்போரூர்), பவானி (திருப்போரூர்), கவுதம் (திருப்போரூர்), ஜான் ரமேஷ் (மதுராந்தகம்), கண்ணன் (திருப்போரூர்) ஆகிய 18 பேர் இடம்பெற்று உள்ளனர்.

நாளைய த.வெ.க. ஆண்டு விழாவுக்கு 3 ஆயிரம் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களுக்கு சைவ, அசைவ விருந்தும் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் உணவுக்கு ரூ.3 ஆயிரம் செலவு செய்யபப்படுவதாக கூறப்படுகிறது.