சென்னை

மூன்றாம் முறையாக விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன.

கடந்த 2013 ஆம் வருடம் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் மற்றும் விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகியது.   பிறகு 2016 ஆம் வருடம் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, விஜய் சேதுபதி நடித்த றெக்கை ஆகிய படங்கள் வெளியாகின.   அதன்பிறகு இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாகவில்லை.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தைத் தொடர்ந்து அவர் நடித்து வரும் டான் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகின்றது.   இதில் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.  இந்த படத்தை சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 18 வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் இதே தேதியில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.  இதனால் மூன்றாம் முறையாக ஒரே நாளில் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் வெளியாகி ஒன்றுடன் ஒன்று மோத உள்ளன.