சென்னை

தொகுதி பங்கீடு குறித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த  பிறகு பேசப்படும் எனக் காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார்.

மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ரஞ்சன் குமார் ஏற்பாடு செய்த சோனியா காந்தி பிறந்தநாள் விழா சத்திய மூர்த்தி பவனில் ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்வுடன் நடந்தது.   இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கலந்து கொண்டு ராட்சத பலூனை பறக்கவிட்டார்.  இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது கே எஸ் அழகிரி செய்தியாளர்களிடம், “கடந்த 10 ஆண்டுகளில் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட பல திட்டங்கள் சோனியா காந்தி மூலம் துவக்கப் பட்டது, வேளாண் சட்டத்துக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் காங்கிரசின் ஆதரவு அதற்கு முக்கியம் ஆகும்.

காந்திய வழியில் விவசாயிகள் போராடி மகத்தான வெற்றியைப் பெற்று இருக்கிறார்கள்.  இது இந்திய விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்குப் பெருமை சேர்க்கக் கூடியது ஆகும்.  கடந்த ஆறு மாதமாக திமுக ஆட்சி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.  தற்போது வெளிப்படையான நிர்வாகம் நடைபெற்று வருகிறது.

மோடி பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கும் முன்பே பெட்ரோல் விலையை ரூ.3 குறைத்த முதல் மாநிலம் தமிழகம் ஆகும், காக்கிரஸ் கட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  திமுக கூட்டணியில் தான்  இருக்கும்.  தேர்தல் தேதி அறிவித்த பிறகு தொகுதிப் பங்கீடு குறித்து பேசப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.