புதுடெல்லி:
பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா/ தனது கிங்பி‌ஷர் நிறுவனத்துக்கு வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார். அவர் ரூ.9,000 கோடி வரை வங்கிகளுக்கு செலுத்த வேண்டி உள்ளது.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் விஜய் மல்லையா லண்டனுக்கு விமானத்தில் தப்பிச் சென்றுவிட்டார்.
அவர் மீது சி.பி.ஐ. மோசடி வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அமலாக்கப்பிரிவு சார்பில் சட்ட விரோத பண பரிவர்த்தனை பிரிவின் கீழ் தனியாக வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் அமலாக்கப்பிரிவு முன் ஆஜராகுமாறு விஜய் மல்லையாவுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளில் பிடிவாரண்டு பிறப்பித்து டெல்லி ஐகோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பித்தது.
லண்டனில் இருக்கும் விஜய் மல்லையா நாடு திரும்ப விரும்புகிறார். ஆனால் அவரது பாஸ்போர்ட் முடக்கப் பட்டுள்ளது. அவரை இந்தியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் இங்குள்ள சட்டம் போதுமானதாக இல்லை என்று கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு தொடரப்பட்ட செக் மோசடி தொடர்பான மற்றொரு வழக்கில் விஜய் மல்லையாவை கைதுசெய்ய ஜாமினில் விடுவிக்க முடியாத மற்றொரு கைது டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் சுமீத் ஆனந்த் இன்று பிறப்பித்துள்ளார்.
தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவுக்கு ஒரேநாளில் இரு கைது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது, நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது