லண்டன்,

கைது செய்யப்பட்ட விஜய் மல்லையாவுக்கு லண்டன் கோர்ட்டு பெயில் வழங்கி உள்ளது.

இந்தியாவில் 9000 கோடி கடன் பெற்று ஏமாற்றி விட்டு, இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்து வரும் விஜய்மல்லையாவை கைது செய்ய ,ஸ்காட்லாந்து யார்டு போலீசாரின் உதவியை நாடியது இந்திய அரசு.

அதன் காரணமாக இன்று கைது செய்யப்பட்ட விஜய்மல்லையா 3 மணி நேரத்திற்குள் லண்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார்.

லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ரேட் கோர்ட்டில் அவருக்கு பெயில் வழங்கப்பட்டுள்ளது.

லண்டன் நேரப்படி காலை 9.30 மணி அளவில் கைது செய்யப்பட்டுள்ள மல்லையா அடுத்த 3 மணி நேரத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் பெற்ற மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை.

ஐ.டி.பி.ஐ. வங்கியில் பெற்ற ரூ.900 கோடி கடனும் அடங்கும். இதுதொடர்பாக, விஜய் மல்லையா மற்றும் அவரது கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிர்வாகிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தபோதே, விஜய் மல்லையா, லண்டனுக்கு தப்பி  சென்று விட்டார். அதன்பிறகு அவர் நாடு திரும்பவில்லை.

அவரை நாடு கடத்தி, தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்திடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் இந்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப லண்டனில் இருந்த விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்தனர். ஆனால் அவர் விசாரணைக்காக இந்தியா கொண்டுவரப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், அடுத்த 3 மணி நேரத்திற்குள் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து மல்லையா கூறியதாவது, தனது மேல் உள்ள வழக்கின் விசாரணை இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், செய்தி ஊடகங்கள் தை பெரிதுபடுத்துகின்றன என்று கூறினார்.