டெல்லி:

ள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பு ஆலோசகராக தமிழகத்தைச்  சேர்ந்த விஜயகுமார் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை உள்துறை அமைச்சகம்  நியமித்து உத்தரவிட்டு உள்ளது.

1975 பேட்ச் தமிழக கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான விஜயகுமார்,  தமிழக  காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்தவர். பிரபல  சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடித்த அதிரடி படைக்கு தலைமை வகித்தவர். அதுபோல மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, அவருடைய பாதுகாப்பு பிரிவு மற்றும் பி.எஸ்.எஃப், சி.ஆர்.பி.எஃப்., ஆகிய துணை நிலை ராணுவப் பிரிவுகளில் தலைமைப் பதவியில் இருந்தவர்.

இவரை மத்திய அரசு வடமாநிலங்களில் அதிகரித்து வரும் நக்சல் பிரச்சினைகளை கவனிக்கும் வகையில், மூத்த பாதுகாப்பு ஆலோசகராக  நியமித்தது. அந்த பணியில் இருந்து,கடந்த ஆண்டு (2018) ஜூன் 13ந்தேதி அவர் ஓய்வு பெற்றார்.

பின்னர், காஷ்மீர் விவகாரங்களில் ஆளுநருக்கு பாதுகாப்பு ரீதியான ஆலோசகராக நியமிக்கப் பட்டார். கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா 370 ஆவது சட்டப் பிரிவினை நீக்கப்பட்டதில், விஜயகுமாரின் பங்கும் இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், விஜயகுமாரை தனது  பாதுகாப்பு ஆலோசகராக உள்துறை அமைச்சரான அமித் ஷா இன்று நியமித்திருக்கிறார்.