சென்னை: விசாரணை கைதி விக்னேஷ் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த நிலையில், இந்த வழக்கை  சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிடாததைக் கண்டித்து பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ்  லாக்கப் மரணம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சட்டப் பேரவையில் ஏற்கனவே விளக்கம் அளித்த முதல்வர், இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். முதலில் இந்த மரணம் சாதாரண மரணம் என கூறி வந்த நிலையில், விக்னேஷ் உடலின் பிரேதபரிசோதனை அறிக்கையில், அவர் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்கமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் இன்று சட்டப்பேரவையில் மீண்டும் எதிரொலித்தது. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் சற்று முன்னர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து பேசிய முன்னாள் முதல்வரும், எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், விக்னேஷ் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் ஏற்பட்டது உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. 3 போலீசார் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்ற சம்பவங்களைத் தடுக்க காவல்துறை அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதுபோல, திருப்பூர் மாவட்டத்தில் 65 வயது முதியவர் மற்றும் அவரது மனைவி நகைக்காக கொலை செய்யப்பட்டி ருப்பது தெரிய வந்துள்ளது. ஈரோடு, திருப்பூர் ஆகிய 2 கொலை, கொள்ளைச் சம்பவங்களும் ஒன்று போல இருப்பதால் ஒரே கும்பல்தான் இவ்விரண்டு குற்றச்செயல்களிடும் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியான அதிமுக, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிடாததைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமை யில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, விசாரணை கைதி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்துள்ள தால் அவரது மரணத்தில் மிகப்பெரிய சந்தேகம் உள்ளது. விக்னேஷ் வழக்கில் முரண்பட்ட தகவல் களை தமிழக அரசு கூறி வருகிறது. விக்னேஷ் தலை உள்ளிட்ட 13 இடங்களிலும் காயங்கள் இருந்துள்ளன. கால் எலும்பு முறிவு என பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ளது. சிபிஐயிடம் வழக்கை ஒப்படைத்தால்தான் விக்னேஷ் வழக்கில் உண்மை வெளியே வரும்.

இதனால்தான்,கைதி விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கு நேர்மையாக,நியாயமாக நடைபெற வேண்டும் என்றால் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால்,இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்காமல் முதல்வர் சிபிசிஐடியிடம் ஒப்படைத்த காரணத்தினால்தான் அதை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம்.

அதே சமயம், தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் காலம் காலமாக நடைபெறும் நிகழ்வு. குறிப்பாக, ஆளுநர் எல்லைக்குள்ளே நடைபெறும் இந்த நிகழ்வை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை. இருந்தாலும் வேண்டும் என்றே திட்டமிட்டு சில அரசியல் காரணத்திற்காக மாவட்ட வருவாய் துறை தடை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. எனினும், முதல்வர் பொதுவானவர், எல்லா மதத்திற்கும் சமமானவர். எந்த மதத்தையும் சாராதவர். அப்படியிருக்க பல்வேறு மதங்களுக்கு பண்டிகை காலத்தில் வாழ்த்து சொன்ன முதல்வர் தீபாவளி காலத்தில் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்று தெரியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.