சென்னை: அரசியல்வாதிகள் மீதான வழக்குகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஆட்சியாளர்களுக்கு ஏற்ப தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையான விஜிலென்ஸ் துறை பச்சோந்தியாக மாறியுள்ளது என ஓபிஎஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
கடந்த 2001 முதல் 2006 ஆண்டுக்கு இடையே அதிமுக ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த ஓபிஎஸ் மீது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.73 கோடி சொத்து சேர்த்ததாக, அடுத்து வந்த திமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. பின்னர், இந்த வழக்கில், ஓபிஎஸ்-ஐ சிவகங்கை நீதிமன்றம் கடந்த 2012 ஆம் ஆண்டு விடுதலை செய்தது. இதையடுத்து அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், முடித்துவைக்கப்பட்ட ஓபிஎஸ்மீதான சொத்துக்குவிப்பு வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்தார். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, கடந்த 2021ம் ஆண்டும் ₨1.77 கோடி சொத்து சேர்த்த வழக்கை திரும்பப் பெற அனுமதித்து ஏன் என்பது குறித்து சிவகங்கை நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்ய உள்ளதாகவும், இதுதொடர்பாக, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல் துறை (விஜிலன்ஸ்) , ஓபிஎஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டது.
மேலும், இதேபோல பல வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறிய நீதிபதி, குற்ற வழக்கு விசாரணை நடைமுறை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது என்று கடுமையாக சாடியதுடன், ஆட்சியாளர்களுக்கு ஏற்ப தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தியாக மாறுகிறது என்றும், லஞ்ச ஒழிப்பு காவல்துறை உருவாக்கப்பட்டதன் நோக்கமே அழிந்துபோயுள்ளது என்றும், எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்த கட்சிக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்பு துறை பச்சோந்தி போல மாறி செயல்படுகிறது, பேசாமல் எம்.பி எம்.எல்.ஏக்களுக்கு சட்டம் பொருந்தாது என அறிவித்து விடலாம் என்று காட்டமாக விமர்சித்தது.
இந்த வழக்கை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற ஆனந்த் வெங்கடேஷ்தான், ஏற்கனவே அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.