சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்த இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர், இன்று அவரது நிறுவன ஆலோசகர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர் விஜயபாஸ்கர்  வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 26 இடங்களில்  கடந்த வாரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார். இந்த சோதனையின்போது, 25 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொடர்புடைய ,ரவி என்பவரின் அண்ணா நகர்  வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். தமிழக போக்குவரத்து துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட தனியார் நிறுவனமான டெடி இந்தியா நிறுவனத்தில் ரவி ஆலோசகராக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இன்று அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.