சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதும், திருமாவளவன் மீதும் தொடர்ந்து அவதூறாக டுவிட்டரில் பிரசாரம் செய்து வருவதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

விஜய் நடித்துள்ள மெர்சல் படம் குறித்த சர்ச்சைகள் தமிழகத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த பட விவகாரத்தில் நடிகர் விஜய்யை அச்சுறுத்தி பணிய வைத்து பாஜக பக்கம் இழுக்க முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த தமிழிசை, யாரையும் கட்சிக்கு இழுக்கும் அவசியமில்லை என பதில் கூறி இருந்தார்.

இதையடுத்து  பாஜக விசிக இடையே மோதல் முற்றி வருகிறது. இந்நிலையில், நேற்று கரூரில் நடைபெற்ற
பாஜக செயற்குழு கூட்டத்தின்போது, விசிக எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து,  பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜாவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கடுமையாக டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில்,   இன்று காவல் ஆணையர் அலுவலகத்துக்கு  வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

அதில்,  அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், விளிம்பு நிலை மக்களின் நலனுக்காக பாடுபடும் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகும். கட்சியை வழிநடத்தி வருபவர் திருமாவளவன்.

எங்கள் கட்சித்தலைவர் திருமாவளவன் நன்மதிப்பை சிதைக்கும் வன்மத்துடன் பாஜகவின் தேசிய செயலர் ஹெச்.ராஜா கடந்த 24-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ”கட்டப்பஞ்சாயத்து, வன்முறை, ரவுடித்தனம் இதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அடையாளம், தமிழக அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்”. எனக் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

இக்கருத்து மிக அபாண்டமானது ஆகும். திட்டமிட்டு வேண்டுமென்றே உள் நோக்கத்துடன் அவதூறு பரப்பியுள்ளார். ஆதாரமில்லாத இந்த கருத்து இணையதளம் வாயிலாக உலகம் முழுதும் பரவியுள்ளது.

இதனால் எங்கள் கட்சி மற்றும் தலைவரின் நன்மதிப்புக்கு பாதிப்பும், லட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களுக்கும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.

எனவே ஹெச்.ராஜா மீது அவதூறு பரப்புதல், மன உளைச்சலைத் தூண்டுதல், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் கிரிமினல் கும்பலை தூண்டுதல், தலைவர் மற்றும் தலித் சமுதாயத்தையும் ஜாதிய மனப்பான்மை யோடு இழிவு செய்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

குறிப்பாக வேறு எந்த அரசியல் கட்சியையோ தலைவரையோ இந்த அளவுக்கு வன்மத்துடன் இழிவுபடுத்தாத ஹெச்.ராஜா  எங்கள் தலைவரும், இயக்கமும் தலித் சமூகத்தின் அடையாளத்தை கொண்டிருப்பதாலேயே சாதிய அடையாளத்துடன் அவர் செயல்பட்டிருப்பதால் அவர் மீது ”தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச்சட்டத் திருத்தத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

புகார் அளித்த பின்னர் பேட்டி அளித்த வன்னி அரசு, ”பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா எங்கள் தலைவர் மற்றும் கட்சி மீது அவதூறாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளது மன உளைச்சலையும் கட்சிக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது பதிவுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” .

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.