கொல்கத்தா:

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு முதன் முறையாக விதர்பா அணி தகுதி பெற்றது.

ரஞ்சி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 2-வது அரையிறுதி போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

கர்நாடக வீரர் மிதுன் வேகத்தில் விதர்பா அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சரிந்தனர். அபாரமாக பந்து வீசிய மிதுன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். முதல் இன்னிங்சில் விதர்பா 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடக அணி கருண் நாயரின் சதத்தின் உதவியால் 301 ரன்கள் குவித்தது.சிறப்பாக விளையாடிய கருண் நாயர் 153 ரன்கள் எடுத்து அசத்தினார் .முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதால் கர்நாடக அணி, விதர்பா அணியை எளிதாக வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

116 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடர்ந்த விதர்பா அணி சற்று சுதாரித்துக் கொண்டு விளையாடியது. முதல் இன்னிங்சில் அபாரமாக பந்து வீசிய கர்நாடக அணியின் பந்து வீச்சாளர்கள் இரண்டாவது இன்னிங்சில் சொதப்பினார்.

விதர்பா கேப்டன் பாசல் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் வினய் குமார் பந்தில் வெளியேறினாலும் மிடில் ஆர்டர் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தால் 313 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக கணேஷ் சதீஷ் 81 ரன்கள் எடுத்தார். கர்நாடக அணி தரப்பில் வினய் குமார், பின்னி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை கர்நாடக அணிக்கு விதர்பா அணி நிர்ணயித்தது. 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் கர்நாடகா அணி 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் வினய்குமார் 19 ரன்னுடனும், ஸ்ரேயாஸ் கோபால் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

வெற்றிக்கு 87 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று 5-ம் நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஆனால், கர்நாடகா அணி 59.1 ஓவரில் 192 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனால் விதர்பா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விதர்பா அணி ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதன் முறையாகும். இறுதிப்போட்டியில் டில்லி அணியுடன் மோதுகிறது.