இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோ தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன்.

மலையாளப்படத்தை இயக்கிய இயக்குநர் எம்.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, “ஆர்.கே.சுரேஷின் தந்தையிடம், படம் எடுப்பதற்காக கதை சொல்லி இருக்கிறேன். ஆனால் அவர், ‘பக்தி படம் தான் எடுக்க போறேன், இந்தக்கதை எடுக்க முடியாது’ என்று சொல்லி எனக்கு 500 ரூபாய் பணம் தந்து அனுப்பினார்.

அதன் பிறகு பல காலம் கழித்துத்தான் அவர் மகன் தான் ஆர்.கே. சுரேஷ் என்பது தெரியவந்தது. நான் இயக்கிய தர்மதுரை படத்தை இவர்தான் எடுத்தார்; என்னை புகழ் பெற செய்தார்.

தந்தை இல்லாத மகனுக்கு தமையன் – அதாவது அண்ணன்- தந்தையாக கவனித்துக்கொள்வார். அதுபோல சுரேஷை அண்ணன் பாலா பார்த்துக்கொள்கிறார்.

சுரேஷ்.. உங்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதம் எல்லாம் உங்கள் தந்தையின் புண்ணியம் தான்.

ஒரு வில்லனை நாயகனாக ஆக்குவது தமிழ் சினிமாவில் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் இந்தப்படத்தை பார்க்கும் போது சுரேஷின் கண்களில் ஒரு அன்பு தெரிகிறது அவருக்கு நடிப்பு சிறப்பாக வருகிறது. அவர் அதை கெட்டியாக பிடித்துகொள்ள வேண்டும். இயக்குநர் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

ஜீவி பிரகாஷ் இசை கேட்க அற்புதமாக இருக்கிறது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என நான் நம்புகிறேன் நன்றி” என பேசினார்.