டெல்லி: புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஆகஸ்ட் 6) நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தனது வாக்கினை செலுத்தினார். தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடு கின்றனர். இவர்களில் வெற்றிப்பெறப்போவது யார் என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.

தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் களமிறக்கப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக, மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டு உள்ளார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டில், போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். எந்தக் கட்சியின் சின்னமும் இடம்பெறாது. அந்த வாக்குச்சீட்டில் இரு பகுதிகள் இருக்கும். அதில் ஒரு பகுதியில் வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும். மற்றொரு பகுதியில் யாரைத் தேர்வு செய்யவிருப்பமோ, அவர்களை வரிசைப்படுத்தி எண்களைக் குறிப்பிட வேண்டும்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள், மாநிலங்களவையில் தேர்வு செய்யப்பட்ட 233 உறுப்பினர்களும், 12 நியமனஉறுப்பினர்களும், 543 மக்களவை உறுப்பினர்களும், 2 நியமன உறுப்பினர்களும் மட்டுமே.  இரு அவைகளையும் சேர்த்து மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 790. அவர்கள் அளிக்கும் வாக்கானது, பொதுமக்கள் அளிக்கும் வாக்காக கருதப்படுவதால், ஒத்த மதிப்புடையதாகவே இருக்கும். மொத்த வாக்காளர்களில் 50 சதவீத வாக்குகளைப் பெறுவோரே, வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தன்கருக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. பாஜக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் வாக்களித்தாலே போதும், அவர் எளிதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.