பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் மும்பையில் இன்று மாரடைப்பால் காலமானார்.

விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் வேதநாயகம்னா பயம் என்று மாறுபட்ட வில்லனாக நடித்திருந்தவர் சலீம் கவுஸ்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த சலீம் கவுஸ் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பிறந்தவர்.

புனே-வில் உள்ள திரைப்பட கல்லூரியில் பயின்ற இவர் 1978 ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஸ்வர்க் நரக்’ படத்தில் முதன் முதலில் தோன்றினார். 1989 ம் ஆண்டு தமிழில் வெளியான வெற்றிவிழா படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார் சலீம் கவுஸ்.

ஜிந்தாவாக வெற்றிவிழாவில் அசத்திய சலீம் கவுஸ் தொடர்ந்து விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர், அஜித் நடித்த ரெட் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

நெஞ்சுவலி காரணமாக நேற்றிரவு மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சலீம் கவுஸ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார், அவருக்கு வயது 70.