சென்னை: வேதனையுடன் பாஜகவில் இருந்து விலகுகிறேன் என  நடிகை கவுதமி பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர அபிமானியாக இருந்து வந்த நடிகை கவுதமி அவரது மறைவுக்கு பிறகு, பாஜக பக்கம் சாய்ந்தார்.  தொடர்ந்து, பாஜக அடிப்படை உறுப்பினராக இணைந்த  நிலையில்,  பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து உரையாடினார். இதையடுத்து பாஜகவில் இருந்தாலும் சிறிது காலம் அரசியலில் ஈடுபடாமல் அமைதி காத்தார்.  பின்னர் பல பாஜக நிகழ்ச்சிகளிலம் கலந்துகொண்டார்.  வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக கோவையிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து, அவருக்கு பாஜகவில் பதவி வழங்கப்படும என எதிர்பார்ப்பு எழுந்தது. கவுதமியை அங்கீகரிக்கும் வகையில், பாஜக செய்தித்தொடர்பாளர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் பரவின.  ஆனால், இதுவரை எந்தவொரு பதவியிம் வழங்கப்படாததால் மன அழுத்தத்துடன் இருந்த கவுதமி, தற்போது பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மிகுந்த வேதனையுடன்  பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

தனது ராஜினாமா குறித்து  கவுதமி பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய பாஜக தலைமைக்கு  எழுதி உள்ள கடிதத்தில்,   25 ஆண்டுகளாக பாஜகவின் வளர்ச்சிக்கு நேர்மையுடன் உழைத்துள்ளேன். 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் கட்சிப்பணி ஆற்றினேன். ஆனால், சீட் கிடைக்கவில்லை. அழகப்பன் என்பவர் தன்னிடம் இருந்து பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தேன். ஆனால் தற்போது அழகப்பனுக்கு ஆதரவாக பாஜகவின் மூத்த நிர்வாகிகள் செயல்படுகின்றனர்.  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பில்டர் அழகப்பன், எனது தனிமையைக் கண்டு என்னை அணுகினார், ஏனெனில் நான் என் பெற்றோர் இருவரையும் இழந்த ஒரு அனாதை மட்டுமல்ல, ஒரு கைக்குழந்தையுடன் கணவர் இன்றி ஒரு தாயாகவும் இருந்தேன். அக்கறையுள்ள ஆண் என்ற போர்வையில் அவர் என்னையும் எனது குடும்பத்தையும் ஆதரிப்பது போல வந்தார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சூழ்நிலையில்தான் எனது பல நிலங்களின் விற்பனை மற்றும் ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்தேன், சமீபத்தில்தான் அவர் என்னிடம் மோசடி செய்ததைக் கண்டுபிடித்தேன். என்னையும் என் மகளையும் அவரது குடும்பத்தில் ஒரு அங்கமாக வரவேற்பது போல் பாசாங்கு செய்து அவர் நன்றாக ஏமாற்றிவிட்டார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் தொடர் புகார்களை அளித்துள்ளதாகவும் இருப்பினும் ஆனால் அந்த செயல்முறை விவரிக்க முடியாத அளவுக்கு இழுத்தடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அழகப்பன் விவகாரத்தில் முழு ஆதரவு இல்லாததையும், மேலும் பாஜகவின் பல மூத்த உறுப்பினர்கள் அழகப்பனுக்கு உதவி செய்து வருவதையும் உணரும்போது உடைந்து போய் கட்சியில் இருந்து விலகுவதாகவும் ,  பாஜக வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தும் எனக்கு கட்சியில் ஆதரவு இல்லை. கனத்த எனவே மிகுந்த வேதனையுடன் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். இதயத்தோடு பாஜகவில் இருந்து விலகுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.