அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும், அது யாருடைய வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ இருக்காது என பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள அயோத்தி நில உரிமை வழக்கில், நாளை காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. ஏற்கனவே நிலத்தை சரிசமமாக பிரித்துக்கொள்ள அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 40 நாட்களாக தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இத்தகைய சூழலில் நாளை காலை 10.30 மணிக்கு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும், யாருக்கு சாதமாக வந்தாலும், அது யாருடைய வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ இருக்காது. இந்த தீர்ப்பு இந்தியாவின் அமைதி, ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தை மேலும் பலப்படுத்த வேண்டும். அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.