டெல்லி: ஜனாதிபதி தேர்தல் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், துணைகுடியரசு தலைவர் வெங்கையாநாயுடுவுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பாஜக மூத்த தலைவர்கள் திடீரென சந்தித்து பேசினர். பாஜக சார்பில் குடியரசு தலைவராக வெங்கையாநாயுடு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 16வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்தமாதம் 18ஆம் தேதி நடை பெற உள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிவிட்டது. ஆனால், வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல், ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் தாமதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், பாஜக சார்பில் இன்று குடியரசு தலைவர் வேட்பாளரை இறுதி செய்வது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இன்று மாலை பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெறுகிறது இதில் புதிய குடியரசு தலைவர் வேட்பாளர் யார் என்பது இறுதி செய்யப்படும் என தெரிகிறது. இந்த பரபரப்பான சூழலில், முன்னாள் மத்தியஅமைச்சரான யஷ்வந்த் சின்ஹாவை களமிறக்க மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். யஷ்வந்த் சின்ஹா கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த நிலையில், அவர் தனது கட்சி பதவியை துறந்துள்ளார்.
இதையடுத்து, மத்தியஅமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்பட மூத்த தலைவர்கள், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையாநாயுடுவுடன் திடீரென சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த ஆலோசானையின்போது, புதிய குடியரசுதலைவர் வேட்பாளர் குறித்து விவாதிக்கப்பட்ட தாகவும், பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக வெங்கைய நாயுடு அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
அதேவேளையில், குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.