புதுக்கோட்டை: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் இதுவரை ஒருவர்மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை மற்றும் மாநில அரசை கண்டித்து, புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் இன மக்களுக்கு விநியோகிக்கப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உடனடியாக வேங்கைவயல் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு நீண்ட காலமாக சாதியப் பாகுபாடு நடைபெற்று வருவது வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்பட வில்லை.

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், பொது மக்கள் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தவில்லை எனவும் தாங்கள் துன்புறுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை 68 பேரிடம் விசாரணை நடத்தி இருப்பதாகவும், சாட்சியங்களின் அடிப்படையில் வேங்கைவயல் கிராம மக்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் எனவும் சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் இதுவரை ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்யவில்லை. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கைக்கு எதிராக  வேங்கைவயல் கிராம மக்கள்  புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் போராட்டக்காரர்களை ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறுத்தி வைத்துள்ளனர்.

அங்கு குழுமியுள்ள கிராம மக்கள்,  குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில், குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லையே ஏன் என்றும், உடனே குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும்,  அதுபோல குடிநீர் தொட்டியை உடைக்க முயன்றவர்களை கைது செய்யவில்லை எனவும் கண்டனம் தெரிவித்து, முழுகமிட்டு முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.