கடலூர்: வீராணம் ஏரி நிரம்பியதால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு அதிக நீர் திறக்கப்பட்டு உள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே  உள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரியானது கடலூர் மாவட்டத்தின் நீர் ஆதாரமாகவும், சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழக்கும் முக்கிய நீராதராமாகவும் விளங்குகிறது.

இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக ஏரிக்கு வரும். தற்பொழுது பெய்து வரும்  மழை மற்றும் காவிரியில்,  டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதாலும் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1,700 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால்,   வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.

வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி. தற்போது அணையின் நீர் மட்டம் 47 அடியாக உள்ளது. இதனால், அணையில் இருநிது விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  இதில் சென்னை குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 48 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. அணைக்கு 500 கனஅடி நீர் வந்துகெண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி, அப்படியே நீர் முழுவதுமாக புதிய மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது.

வீராணம் ஏரி நிரம்பியதால் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் 44 ஆயிரத்து 800 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.