சென்னை: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, நாளை இரவு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய நபர்களுக்கு ஆளுநர் விருந்தளிப்பது வழக்கமான நடைமுறை. அதன்படி நாளை ஆளுநர் தரும் விருந்தில் விசிக பங்கேற்காது என அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும்படி முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆளுநர் தமிழக அரசுக்கு எதிரான மன நிலையில் செயல்படுவதால், எதிர்க்கட்சிகள் அவர்மீது விமர்சனங்களை வாரியிறைத்து வருகின்றன.
இந்த நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தீர்மானங்களை நிறுத்திவைத்து, தமிழக மக்களின் உரிமையை அவமதிக்கும் ஆளுநரின் தேநீர் அழைப்பை நிராகரிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவனும் ஆளுநர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட் பதிவில், ‘சித்திரை 01- தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் ஆளுநர் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனக்கும் அழைப்பு விடுத்துள்ள ஆளுநர் அவர்களுக்கு நன்றி. எனினும், அந்நிகழ்வில் நான் பங்கேற்க இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.