வாழப்பாடி: நோய்தீர்க்கும் மந்திரப்பலகை கண்டுபிடிப்பு

Must read

சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்து துக்கியாம்பாளையத்தில் 125 ஆண்டுகளுக்கு முந்தைய,  நோய் தீர்க்கும் மாந்திரீக மரப்பலகையை வரலாற்றுத் தேடல் குழுவினர் கண்டெடுத்தனர்.
ஆறகளூர் வெங்கடேசன், டாக்டர் பொன்னம்பலம், ஆசிரியர் கலைச்செல்வன், சீனிவாசன், பெரியார்மன்னன், ஜீவா உள்ளிட்டோர் ஒன்றிணைந்து, வரலாற்றுத் தேடல் குழு என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்த அமைப்பினர் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களையும், கோயில்கள், நடுகற்கள், கற்குவை, கல்வட்டம், புதிர்நிலை ஆகியவற்றை ஆய்வு செய்து புதைந்துக் கிடக்கும் பல்வேறு வரலாற்றுத் தகவல்களை வெளிக்கொணரும் சிறந்த பணியை செய்து வருகின்றனர்.
1
அதோடு, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு வரலாற்று ஆர்வலர்களை ஒருங்கிணைத்து மரபு நடைப்பயணமும் நடத்தி, வரலாற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளனர்.  தமிழகத்தில் நடந்த மூக்கறுப்பு போர் குறித்த கல்வெட்டையும், முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டையும் இக்குழுவினரே கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில், 125 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த மந்திரப்பலகையை இக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் புளியந்தோப்பு பகுதியில்  வசிப்பவர் பாக்யராஜ். (வயது 30). இவர் பெருமாள் கோயில் பூசாரி குடும்பத்தைச் சேர்ந்தவர்.  இவரது  வீட்டில் கல்வெட்டு போன்ற தமிழ் எண்ணும், எழுத்துகளும் பொறிக்கப்பட்ட 125 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மாந்திரீக மரப்பலகை ஒன்றை இப்போதும் வழிபட்டு வருகிறார்கள்.

பெரியார் மன்னன்
பெரியார் மன்னன்

இதை அறிந்த, “வரலாற்றுத் தேடல் குழுவினர்” பாக்யராஜை அணுகி அந்த மாந்திரீக பலகையை பார்வையிட்டனர்.  இதுகுறித்து  இக் குழுவைச் சேர்ந்த வாழப்பாடி பெரியார் மன்னன், “ 125 ஆண்டுகளுக்கு முன் கிராம மக்களுக்கும், கால்நடைகளுக்கும் நோய் தீர்க்க மந்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கோமாரிக்கல் அல்லது சன்னாசிக்கல் என குறிப்பிடப்படும் கல்வெட்டுகளை பயன்படுத்தினர். இந்த மாந்திரீக பலகையைவைத்து கோயில் பூசாரிகளும். சந்நியாசிகளும் சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கத்தில் இருந்தது.  அந்த கல்வெட்டுகள் வாழப்பாடி பகுதியில் பல்வேறு கிராமங்களில் இன்றளவும் காணப்படுகின்றன.
இது மிக அபூர்வமானது.  மூன்றடி நீளமும், அரையடி அகலமும் உள்ள இந்த மரப்பலகையில் கோமாரிக்கல்வெட்டை போல ஆன்மிக சக்கரமும், தமிழ் எண்ணும், எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த மரப்பலகை பார்ப்பதற்கு, தற்கால கம்ப்யூட்டர் கீ போர்டு போல காணப்படுவது ஆய்வுக்குறியதாகும்”  என்றார்.
மாந்திரீக மரப்பலகையை பாதுகாத்து வரும் பாக்கியராஜ், “ பெருமாள் கோயில் பூசாரி குடும்பத்தைச் சேர்ந்த எனது மூதாதையர் கிராம மக்கள் மற்றும் கால்நடைகளின் நோய் தீர்க்க பூஜை நடத்துவதற்கு இந்த மந்திரப் பலகையை பயன்படுத்தினர். அதை 125 ஆண்டுகளுக்கும் மேலாக வழிவழியாக பாதுகாத்து வருகிறோம். ஆண்டுதோறும் ஆயுத பூஜை தினத்தில் அதற்கு சிறப்பு பூஜை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article