“1947 ல் இந்தியாவுக்குக் கிடைத்தது பிச்சை… 2014 ல் கிடைத்தது தான் உண்மையான சுதந்திரம்” என்ற கங்கனா ரனாவத்தின் ஆணவ பேச்சுக்கு வருண் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா ரனாவத், இந்திய சுதந்திரம் குறித்து கருத்துக் கூற ஒரு நடிகையாக தேசியவாதியாக தனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று கூறினார்.

மேலும், இந்திய சுதந்திரம் குறித்து தனக்கு பல்வேறு விவரங்கள் தெரியும் என்றும் பேசிய அவர், “காங்கிரஸ் என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்றது ஆங்கிலேயர்களின் நீட்சியைத்தான்” என்று பேசினார்.

“மகாத்மா காந்தியின் தியாகத்தை சில நேரங்களில் கொச்சைப்படுத்தினார்கள், காந்தியைக் கொன்றவரைப் பலநேரங்களில் கொண்டாடுகிறார்கள், இப்போது ஜான்சிராணி முதல் சுபாஷ் சந்திரபோஸ் வரை பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்கள் உள்ளிட்ட பல லட்சக்கணக்கான மக்களின் தியாகத்திலும் போராட்டத்திலும் கிடைத்த சுதந்திரத்தை ஏளனமாக பேசுகிறார்கள்.

இவரது இந்த கருத்து பைத்தியக்காரத்தனமானது என்று சொல்வதா அல்லது தேச துரோகம் என்று சொல்வதா என்று தெரியவில்லை” என்று பாஜக எம்.பி. வருண் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கங்கனா ரனாவத்தின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருவதுடன் அவரது ஆணவ பேச்சுக்கு நாட்டு மக்களிடையே மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும்.

மத்திய அரசு அவர் மீது நடவடிக்கை எடுத்து தாய்நாட்டின் சுதந்திரத்தை இகழ்ந்து பேசியவருக்கு அளித்த பத்ம ஸ்ரீ விருதை திரும்பப்பெற்று அவரது வாயை அடைக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.