சேலம்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த ‘வரும் முன் காப்போம்’ திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சேலம் மாவட்டம் வாழப்பாடியில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் சாதாரண மக்களும் நோய் நொடியின்றி வாழ வேண்டுமென்பதற்காகவும், பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், உடல்நலம் குறித்த ஆலோசனை வழங்குதல், நோய் கண்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தல், சுகாதார விழிப்புணர்வுக் கல்வி,  உடல்நல மேம்பாடு மற்றும் தனிநபர் ஆரோக்கியத்தை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு “வருமுன் காப்போம் திட்டம்” கடந்த 2006ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்தை அடுத்து வந்த அதிமுக ஆட்சி கைவிட்டது. ஆனால், இந்த திட்டம் மீண்டும் கொண்டு வருவோம் என்று, சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது முதல்வர் மு.கஸ்டாலின் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது, ‘கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம்’ மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

இன்று சேலம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரும் முன் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து,  இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும் அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 1,250 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று கூறியதுடன்,  இம்முகாம்களில் பன்முனை மருத்துவப் பரிசோதனை, கண், பல், காது – மூக்கு – தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், காசநோய், மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள், இருதய நோய்கள், சிறுநீரகக் கோளாறு, குழந்தை நல சிறப்பு மருத்துவம், மனநல மருத்துவம், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவம் மற்றும் புற்றுநோய் மருத்துவம் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும்,  மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் முகாமிலேயே சிகிச்சையும், இலவசமாக மருந்துகளும் வழங்கப்படும். தொடர் சிகிச்சை தேவைப்படின், நோயின் தன்மையைப் பொறுத்து எந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் செல்ல வேண்டும் என்ற விவரங்களுடன் அடையாள அட்டைகள் வழங்கப்படும். தொடர் சிகிச்சை பெற வேண்டியவர்களுக்குத் தேவைப்படும் விவரங்கள் அனைத்தும் மாவட்ட அளவில் முகாம் வாரியாகக் கணினியில் பதியப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.