வாரனாசி:

பாலியல் பலாத்கார சாமியார் ராம் ரஹீம் சிங்கை தூக்கிலிட வேண்டும் என்று சாதுக்கள் உ.பி மாநிலம் வாரனாசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆஸ்ரமத்தில் வேலை பார்த்த இரு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சாமியார் குர்மித் ராம் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிபதி ஜெகதீப் சிங் இன்று உத்தரவிட்டார்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் சாமியார் குற்றவாளி என நீதிமன்றம் உறுதிப டுத்தியதை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களில் 38 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமடை ந்தனர். பொதுச் சொத்துக்கள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்நிலையில் உ.பி மாநிலம் வாரனாசியில் சாமியார் ராம் ரஹீமை தூக்கிலிட வேண்டும் என கோரி சாதுக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கையில் கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தி கலந்துகொண்டனர். மேலும், அவரது தவறான செயலுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘உண்மையான சாது என்றால் சொகுசு வாழ்க்கையை துறந்து சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும். ஆனால் இவர் பணம் மற்றும் அதிகார பலத்துடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவரை தூக்கிலிட வேண்டும்’’ என்றனர்.