டில்லி

வெளிநாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்களை அழைத்து வரும் வந்தே பாரத் மிஷன் 4ஆம் கட்டம் வரும் ஜூலை 3 ஆம் தேதி தொடங்க உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் சர்வதேச விமானச் சேவைகளை மத்திய அரசு நிறுத்தியது.  அதனால் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா, பணி நிமித்தம், சிகிச்சை, உறவினர் சந்திப்பு உள்ளிட்டவற்றுக்குச் சென்ற இந்தியர்கள் நாட்டுக்குத் திரும்ப இயலாத நிலை உண்டானது.   இவர்களை இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் 6ஆம் தேதி முதல் வந்தே பாரத் மிஷன் என்னும் திட்டத்தை மத்திய அரசு  செயல்படுத்தி வருகிறது.  இத்திட்டத்தின் கீழ் உலகின் பல நாடுகளிலும் சிக்கி உள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு ஏர் இந்தியா விமானம் மத்திய அரசு திரும்ப அழைத்து வருகிறது.  இதில் ஏற்கனவே 3 கட்டங்கள் முடிவடைந்துள்ளன.

 வரும் ஜூலை மாதம் 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நான்காம் கட்டம் தொடங்க உள்ளது.  இந்த 4ஆம் கட்டத்தில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், கென்யா, இலங்கை, பிலிப்பைன்ஸ், கிரிகிஸ்தான், சவுதி அரேபியா, வங்கதேசம், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, மியான்மர், ஜப்பான், உக்ரைன், வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு விமானச் சேவை இயக்கப்படுகிறது.

 மொத்தம் 17 நாடுகளுக்கு 170 விமானங்கள் இயக்கப்பட உள்ளன.