சென்னை: வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் சூரியன் உதிப்பது போல் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை பிப்ரவரி 15ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின்  திறந்து வைக்கிறார்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த அதிமுக ஆட்சியின்போருது, கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் 2012 ஏப்ரல் 30 ஆம் தேதி, அன்றைய முதல்வர் ஜெயலலிதா புதிய பேருந்து நிலைய திட்டத்தை அறிவித்தார்.  அதன்படி, வண்டலூர் அடுத்த சென்னையில் உள்ள ஜி. எஸ். டி சாலை மீது 88.52 ஏக்கர்கள் (358,200 m2) பரப்பளவில்  பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.   இந்த பேருந்து நிலையத்திலிருந்து, தென் தமிழ்நாட்டிற்கு குறிப்பாக திருச்சி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன. இது ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆகும். இங்கிருந்து புறநகர் அரசாங்க பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் எம்.டி.சி பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.

இந்த பேருந்து  நிலையத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 88 ஏக்கர் நிலம் தொல்பொருள் துறைக்கு சொந்தமானது என்பதால், பேருந்து நிலையம் கட்டப்படுவதில் பல்வேறு இழுபறிகள் நீடித்தது. பின்னர் கொரோனா தொற்று காரணமாக தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, தொடங்கப்பட்ட  பணிகள் கடந்த 2020ம் ஆண்டு முடிவுக்கு வரும் என கூறப்பட்ட நிலையில், மேலும் மேலும் இழுத்துக்கொண்டே சென்றது. இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திமுக அரசு பணிகளை துரிதப்படுத்தியது. அதனால், 2022 தீபாவளினு திறக்கப்படும் என கூறப்பட்டது. பின்னர்,  2023 பொங்கலுக்கு திறக்கப்படும் என கூறப்பட்டது. இதற்கிடையில் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பணிகள் அமைக்க முடிவு செய்ததால்,‘ கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சர் சேகர் பாபு அளித்த பேட்டியில், பொங்கலுக்கு முன்பாக திறக்கப்படுவது சந்தேகம்தான். அதேசமயம் குறிப்பிட்ட தேதியை சொல்ல முடியாது எனக் கூறினார். இதன்மூலம் பொங்கலுக்கு வாய்ப்பில்லை என்று தெரியவந்தது.  பேருந்து நிலையத்தில், Dome Structure எனப்படும் மத்தியில் அமைக்கப்படக் கூடிய திட்டத்தின் முதன்மையான கட்டுமானங்கள், உதய சூரியன் வடிவில் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போது, பிப்ரவரி 15ந்தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். இது சென்னையின்  மூன்றாவது பேருந்து நிலையமாக  உருவெடுத்துள்ளது.

இதைடுத்து, திருமழிசையில் நான்காவது பேருந்து நிலையம் வரவுள்ளது. இங்கிருந்து மேற்கு மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிற்கு கோயம்பேடு பேருந்து நிலையம் முழுமையாக அகற்றப்பட்டு, அதன் நிலப்பகுதி புதிய திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.