சென்னை: கோவை  தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தாமரை சின்னத்துடன் வாக்களித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதனால், வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என  காங்கிரஸ் வேட்பாளர் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில்  பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், வானதி சீனிவாசன்  தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட உடையுடன்  வாக்களித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதனால், தேர்தல் விதியை மீறிய வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என  காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார்  தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு  தேர்தலின்போது, பிரதமர் மோடி, வாக்களித்துவிட்டு, தாமரை சின்னத்தை காட்டியதால், அவர்மீது வழக்கு பதியப்பட்டது. அதுபோல வானதி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.