கோவை: தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்சிபர் நடிகரும், கட்சித் தலைவருமான கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அதுபோல, பாரதிய ஜனதா கட்சி சார்பில், பாஜக மகளிரணி தேசிய தலைவா் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். அவர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வதாக அறிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக 12ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 19ந்தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைகிறது. இதையொட்டி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் கோவை செல்கிறார். அவருக்கு கட்சி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதையடுத்து, பாலசுந்தரம் சாலையில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்திற்குச் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறர். அவருக்கு வேட்புமனு தாக்கல் செய்ய பிற்பகல் 1.30 மணி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஓய்வெடுக்கும் கமல், மாலை 6 மணிக்கு ராஜவீதி தோமுட்டி பகுதியில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
அதுபோல, பாரதிய ஜனதா கட்சி சாா்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மகளிரணி தேசிய தலைவா் வானதி சீனிவாசனும் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளாா். அவர் காலை 9.30 மணிக்கு காந்திபுரம் நூறு அடி சாலையில் தெற்கு தொகுதிக்கான தோதல் அலுவலகத்தை திறந்து வைக்கும் அவா் கட்சியினருடன் காந்திபுரத்தில் இருந்து ஊா்வலமாக பாலசுந்தரம் சாலையில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்திற்குச் சென்று அங்கு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.