காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களைத் தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்திற்கு கருப்பு உடை அணிந்து வந்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பரபரப்பை ஏற்படுத்தினார்.

மோடி குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு ஜனநாயக படுகொலை என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் குரலெழுப்பி உள்ளன. மத்தியில் ஆளும் பாஜக அரசின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்தும் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியை முறியடிக்கவும் அனைத்து எதிர்கட்சியினரும் ஓரணியில் திரண்டுள்ளனர்.

அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதாலேயே ராகுல் காந்தி மீதான இந்த வழக்கை அவசரகதியில் விசாரித்து தீர்பளித்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று முதல் கருப்பு உடையணிந்து அவை நடவடிக்கையில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கருப்பு உடையில் வந்திருந்தனர்.

பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் கருப்பு உடை அணிந்து வந்தது செய்தியாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.