சென்னை, 

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 34 ஆவது அமர்வு கடந்த பிப்ரவரி 27 ம் தேதி ஜெனிவாவில் துவங்கியது. இந்த அமர்வு வரும் மார்ச் 24 வரை நடைபெறும். இந்த நிலையில், “இலங்கைக்கு கால நீட்டிப்பு அளிக்கக்கூடாது” என்று வலியுறுத்தி, ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் ஆணையர் ரவுத் அல் உசேனுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மின்னஞ்சல் மூலம் கடிதம் எழுதியுள்ளார்.

அக் கடிதத்தில் வைகோ தெரிவித்திருப்பதாவது: “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும். ஈழத் தமிழர்கள் சார்பிலும், உலகத் தமிழர்கள் சார்பிலும் நீதி கேட்டு இக்கோரிக்கை மனுவினை அனுப்புகிறேன். ஏற்கெனவே கடந்த 2015ம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான எண் 30/1 இன்படி இலங்கை அரசு அப்பொழுது ஒப்புக்கொண்டபடி எதனையும் நிறைவேற்றாமல் நிராகரித்து வருகிறது.

போதுமான கால அவகாசமும், நீட்டிப்பும் கொடுக்கப்பட்டும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட எந்தச் செயலையும் இலங்கை அரசு முன்னெடுக்கவில்லை. ஐ.நா.வினுடைய சிறப்புப் பார்வையாளர் அண்மையில் சமர்ப்பித்த அறிக்கையின்படி தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளும், மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், இதுகுறித்து இலங்கை அரசுக்கு எந்தவித நீட்டியும் தரக்கூடாது.

ஆகவே, இலங்கைப் பிரச்சினையை ஐ.நா.வின் பொதுச் சபைக்கு எடுத்துச் செல்லவும், பொதுச் சபை அதனை பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்லவும் உரிய பரிந்துரையைச் செய்ய வேண்டும். அதன் மூலம் அகில உலக குற்றவியல் நீதிமன்றத்தில் இப்பிரச்சினை எடுத்துச் செல்லப்பட வேண்டும். மனிதகுலத்திற்கு எதிராக வடகொரியா நடத்திய கொலைக் குற்றத்துக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியதைப் போல இலங்கைப் பிரச்சினையில் “அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயம்” அமைக்கப்பட வேண்டும்.

இலங்கை அரசின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தற்போதைய அரசை இயக்குகின்றவர்களில் ஒருவராக உள்ளார்.  இவர் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கின்ற அலுவலகத்தின் மூலம் நாமே அந்த வேலையைச் செய்துகொள்ளலாம். யுத்த காலத்தில் நடைபெற்ற குற்றங்களை நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டிய தேவையே கிடையாது என்று அறிவித்தார்.

மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்திற்கு எதிராக இலங்கை அரசு செயல்படுவதை ஐ.நா. மன்றம் தடுக்காவிட்டால் இது போன்ற போர்க் குற்றங்களையும், மனித உரிமை அழிவையும் இத்தகைய மனோபாவம் கொண்ட நாடுகள் செய்வதற்கு ஊக்கம் அளிப்பதாகவே அமையும்“ இவ்வாறு வைகோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.