சென்னை:

சென்னை வடபழனி அரசு பேருந்து போக்குவரத்து பணிமனையில் நள்ளிரவு தறிகெட்டு ஓடிய பஸ் ஒன்று, அங்கிருந்த  ஓய்வறை மீது பயங்கரமாக மோதியது. இதில் சுவர் இடிந்து விழுந்து ஓய்வறையில் அமர்ந்து இருந்த 7 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நாகேஸ்வரி தனது கணவர் பாரதியுடன்

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த தொழில்நுட்ப பிரிவு ஊழியர் பாரதி (வயது 33) என்ற இளைஞரின் மனைவி நாகேஸ்வரி,  சம்பவ இடத்தை பார்வையிட்ட நிலையில், பதறி துடித்தக்காட்சி அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்தது.

இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 24 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், இந்த துயரச் சம்பவம் ஏற்பட்டது அவர்களுக்கு குடும்பத்தினரிடையே  பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேசிய நாகேஸ்வரி, எங்களது திருமணத்திற்கு, அதிகாரிகள் என் கணவருக்கு ஒரு வாரம் மட்டுமே விடுமுறை அளித்தனர். எங்கள் திருமணம் முடிந்த மறுநாளே எனது கணவர் பணியில் சேர்ந்து கையெழுத்து போட்டார்.

பஸ் மோதியதால் சேதமான ஓய்வறை

திருமணத்திற்காக எனது கணவர் ஒரு மாதம் மருத்துவ விடுப்பு கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தார். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட அதிகாரிகள் ஒருவாரம் மட்டுமே அவருக்கு விடுமுறை அளித்தனர். தற்போதுதான், விடுமுறை முடிந்து அவர் பணியில் சேர்ந்தார். சம்பவத்தன்று இரவு அவருக்கு போன் செய்தேன், ஆனால், அவர் போன் அட்டர்ன் பண்ண வில்லை… அவருக்கு  அவ்வளவு பணிச்சுமை இருந்துள்ளது. இந்த நிலையில், அவர் இறந்து விட்டதாக செய்தி தெரிவிக்கப்பட்டது.

போக்குவரத்து துறையில் முக்கியமான பணியான தொழில்நுட்ப ஊழியர்களின் ஓய்வு அறை தரமற்ற வகையில் இருந்துள்ளதே, இந்த விபத்துக்கு காரணம் என்றவர்,   எனது கணவரின் இறப்புக்கு அரசு உரிய பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நாகேஸ்வரி கண்ணீர் மல்க கூறினார்.