சென்னை:

நாங்க மிட்டாய் கொடுத்து ஜெயிச்சோம்னா நீங்க அல்வா கொடுத்தா ஜெயிச்சீங்க ? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கேள்வி விடுத்தார்.

வேலூர் மக்ளவைத்தொகுதிக்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. இதில் பிரதான கட்சிகளாக போட்டியிடும், அதிமுக, திமுக இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் மாறி மாறி வசை பாடி வருகின்றனர்.

அதிமுகவினர் பேசும்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளதாகவும், திமுக மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாகவும்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய ஸ்டாலின்,  38 தொகுதிகளில் நாங்கள் மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றோம் என்றால் தேனியில் நீங்கள் அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா? என்று  கேள்வி எழுப்பினார்.

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுக வில் இணையும் விழா மற்றும் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சமீபத்தில் டிடிவி அணியில் இருந்து விலகிய தங்கத்தமிழ்செல்வன் செய்திருந்தார்.

இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கட்சியில் சேர்ந்தவர்களை வரவேற்று பேசியவர், இன்றைக்கு ஆயிரக்கணக்கில் இங்கே வந்துள்ளவர்கள் அனைவரும், வரவேண்டிய இடத்துக்கு தான் வந்திருக் கிறீர்கள் என்று கூறியவர்,  தங்க தமிழ்செல்வனை திமுகவுக்கு இழுக்க ரொம்ப நாளாகவே தூண்டில் போட்டு வந்ததாகவும், ஆனால் அப்போதெல்லாம் மாட்டாதவர், தற்போது தூண்டிலில் சிக்கிவிட்டார் என்று தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. ஆனால், அதை அதிமுகவினர்,  பொய்யான வாக்குறுதி தந்து வெற்றி பெற்றதாக கூறி வருகிறார்கள்..மக்களுக்கு  மிட்டாய் கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்கிவிட்டார்கள் என்று கூறுகிறார்கள்  என்று கூறியவர்,  38 தொகுதிகளில் நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றி வெற்றி பெற்றோம் என்றால், நீங்கள் ஒரு தொகுதியில் (தேனி) வெற்றி பெற்று இருக்கிறீர்களே.

அப்போ,  நீங்கள் அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா? தமிழக மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் பேசலாமா?  என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மேலும், இன்றைக்கு இருக்கும் ஆட்சி இன்றைக்கா, நாளைக்கா என கோமா நிலையில் உள்ளது என்று தெரிவித்தவர, அடுத்த நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளில் குறைந்த பட்சம் 200 தொகுதிகளிலாவது வெற்றி பெற்று கம்பீரமாக  திமுக ஆட்சி அமைக்கும் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,   தமிழக மக்களுக்கு நாங்கள் கொடுத்து இருப்பது வாக்குறுதி. இன்று இல்லை என்றாலும் நாளை தி.மு.க. தானே ஆட்சிக்கு வரப்போகிறது. தேர்தல் நேரத்தில் தந்துள்ள அத்தனை உறுதிமொழிகளையும், மீண்டும் தேர்தல் நேரத்தில் தரப்போகும் அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றியே தீருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.