சென்னை: வாச்சாத்தியில் மலை கிராமத்தைச் சேர்ந்த 18 பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. 1992ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது சந்தனமர கடத்தல் வீரப்பன் வழக்கு தொடர்பாக, விசாரணை என்ற பெயரில் இந்த வன்கொடுமை நடைபெற்றது.

1992ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைகிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி காவல்துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபட்டனர். 1992ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி இன்று சம்பவங்கள் நடந்தேறியது. அப்போது, வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அங்கிருந்த இளம் பெண்கள் 18 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் என்று 215 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 269 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. வழக்கு நடந்த 19 ஆண்டுகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர். இந்தப் பின்னணியில், குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. இவர்களில் 126 பேர் தமிழக அரசின் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் தமிழக காவல்துறையினர். மீதமுள்ள ஐந்து பேர் தமிழக வருவாய்த் துறை ஊழியர்கள்.
இதன் மீதான விசாரணையை தமிழக காவல்துறை முறையாக நடத்தவில்லை என்கிற புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. 20 ஆண்டுகாலம் இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் 2011ம் ஆண்டு தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். இருந்தாலும் வழக்கை விசாரித்த தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என பரபரப்பு தீர்ப்பளித்தது.

அதன்படி, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னைஉயர்நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தனர். இதனால் தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வாச்சாத்தி மலை கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். வழக்கின் விசாரணை பரபரப்பாக நடைபெற்று வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபிநாத், ஜான் சத்தியன், ரமேஷ் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கின் மேல் முறையீட்டு மனு மீது நீதிபதி வேல்முருகன் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளிக்கிறார்.
[youtube-feed feed=1]