சென்னை

மிழகத்தில் ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வு செயலர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

கடந்த 2 வாரங்களாக தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் பல இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், தமிழகத்தில் தற்போது கையிருப்பில் உள்ள 5 லட்சம் தடுப்பூசிகள், நாளை வரை மட்டுமே போதுமானது என்ற தகவல் வெளியானது.

தமிழகத்தில் நிலவி வரும் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில், “தமிழகத்திற்கு இதுவரை 96 லட்சத்து 10 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன.   இதுவரை 87 லட்சத்து 70 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.மத்திய அரசு  மே மாதத்திற்கு ஒதுக்கீடு செய்த தடுப்பூசிகளில் 1 லட்சத்து 47ஆயிரம் வர வேண்டி உள்ளது, இது நாளை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஜூன் மாதத்திற்கு 48 லட்சத்து 58 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  ,இதன் முதல் தவணை ஜூன் 6ம் தேதி தான் கிடைக்கும் என்பதால் ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட உள்ளது” என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.